Friday, January 4, 2008

தனிமை



பூத்துக் குலுங்கும் மரங்கள் மத்தியில்
ஓரிலை மட்டும் கொண்டதோர் மரம்

கருநிற வானில் நேற்றுபல விண்மீன்
இன்றோ விண்ணில் ஒன்றே மிச்சம்

கூட்டமாய் பறக்கும் பறவைகளுள் ஒன்று
தனியே உலவுகின்றது வானில் இன்று

ஏதும் குறையற்ற வெள்ளைத் தாளின்
நடுவே விளங்குவது கருநிறக் குறி

கதம்பமாய் தொடுத்த மலர் ஆரமதில்
உயிருடன் இருப்பதோ தனிமலர் ஒன்று

பசுமை வயலில் கதிரும் வணங்கிட
தானியம் மட்டும் ஒன்றே உள்ளது

சேர்த்து சேர்த்து இருப்பிடம் கட்டிட
கிடைத்து இருப்பது ஒருதனிச் செங்கல்

இயற்கை அளிக்கும் பாடம் நமக்கு
ஒற்றுமை என்னும் வேதமே ஆகும்
மணக்கும் மலரும் பறக்கும் பறவையும்
ஞாலத்தில் எதுவும் ஒன்றுதான் இருப்பின்
அழகை இழந்து அழிவேற்கும் உலகம்

சுற்றிலும் இருப்ப தனைத்திலும்
முற்றிலும் இறைவன் உளான்
சுற்றிலும் எதுவும் இல்லையேல்
தனியே நீயும் இருப்பின்
இறைவன் இல்லையென் றாகுமோ ?

வருத்தம் பலப்பல மனதில் குமிய
பகிர்ந்து கொள்ள ஒருவரும் இல்லையேல்
இருத்தல் வேண்டாம் உலகிலென எண்ணி
இறத்தலே மேலென எண்ணும்நிலை கொடுமை

திக்கெட்டும் சுவர்கள் மட்டுமே இருந்திட
அவற்றுடன் மட்டும் பேசும்நிலை கொடுமை

தன்னோடு தானே பேசுவதும்
எண்ணங்கள் தாமும் மோதுவதும்
விண்ணும் மண்ணும் பார்த்து
செய்வினை இன்றி தவிப்பதும்
புகழ்ச்சியில் தானும் திளைத்தாலும்
இகழ்ச்சியில் மூழ்கித் தவித்தாலும்
வாழ்வில் துணையென ஒருவர்
இல்லையேல் வாழ்தலே கொடுமை

கொலையும் கொடுமை தீண்டாமை கொடுமை
வறுமை கொடுமை - தற்
பெருமையும் கொடுமை
தீச்சொல் தீச்செயல் கொடுமை
தீயோர் தீவினை கொடுமை
இவற்றினும் கொடுமை ஒன்றும் உண்டெனில்
அதுவே மிகப்பெரும் கொடுமை -
தனிமை

No comments: