Friday, September 2, 2011

உரையாடல்


விழைந்தேன் நீயெனை அறிவாயென
விழைந்தேன் நீயெனை அறிவாயென
விழைந்தபடி நீயெனை அறிந்தபின்னும்
விழைந்தேன் நீயெனை அறிவாயென

அறிவேன் உனைநான் எக்கணமும்
அறிவாய் நீயதை இக்கணமே
மன்னிப்பாய் ஏதும் தவறிழைத்தால்
மறவேன் எந்தன் தவறுகளை

எனக்கென சிலநொடி நான்கேட்டேன்
எனக்கென முழுவாழ்வு நீதந்தாய்
நான்கேட்ட சிலநொடி கிடைக்காமல்
எனக்கென சிலநொடி நான்கேட்டேன்

பலநொடி தந்ததை உணராமல்
உனக்கென சிலநொடி நீகேட்டாய்
என்னிடம் இல்லா உன்நொடியை
எங்கிருந்து தருவேன் உனக்கென

அறியாமல் நானும் வருந்தினேன்
அறியவே உனைநான் வருத்தினேன்
அறிந்தேன் நானதை இன்றே
அறிவாயே நீயதை நன்றே

நீ வருந்த நான் விழையேன்
நீ வாழ நான் விழைந்தேன்
உணர்வாய் நீயென் வாழ்வென
இதற்குமேல் உன்னிடம் சொல்ல என்ன ??

Friday, July 15, 2011

உனக்காக ஒரு சிந்தடி …


சிந்தை மயக்கும் மழைச்சாரல்
கார்முகில் எனக்கின்று தந்ததே

சிந்தியது நீர்த்துளியோ இல்லை
கார்க்கோடல் மலரின் தேனோ

சிந்திய தேனும் நாவில்
கார்ப்பும் கலந்தினித்தது ஏனோ

சிந்தனையில் இதையெண்ணி மூழ்கிட
கார்வையும் தனியாகப் பாடவைத்தாய்

சிந்தூரம் அணிந்த நெற்றியும்
கார்வட்டம் சுழன்றாடும் கண்களும்

சிந்தாத மணிமாலைப் புன்னகையும்
கார்த்திகை தீபமெனப் பொலிவும்

சிந்தித்து சிந்தித்து என்இதயம்
காராக்கிருகம் எனக்கே இட்டதே…

Sunday, June 19, 2011

உன்னை நினைக்கிறேன்…


என்னைப் பார்க்கும் தருணம் முழுதும்
உன்னை நினைக்கிறேன்.
கண்ணாடியில்…

துளிகள் மண்ணில் விழுவதைப் பார்த்து
உன்னை நினைக்கிறேன்.
மழையின்…

நிலவைப் பார்த்த சாமத்தில் நானும்
உன்னை நினைக்கிறேன்.
வானில்…

பிம்பங்கள் நீரில் தெரிவதைக் கண்டு
உன்னை நினைக்கிறேன்.
நிலவின்…

இன்னிசை செவியில் கேட்கும் வேளையில்
உன்னை நினைக்கிறேன்.
குயிலின்…

வாசம் சுவாசம் துளைக்கின்ற நிமிடம்
உன்னை நினைக்கிறேன்.
மலரின்…

உயிரும் மெய்யும் ஒன்றாய்ச் சேர்ந்திட
உன்னை நினைக்கிறேன்.
தமிழின்…

என்னை நினைக்கும் நொடிகள் எல்லாம்
என்னை மறக்கிறேன்.
உன் இதயம்…

Sunday, June 12, 2011

என்றென்றும் …


கல்லில் செதுக்கியாற்போல் நிலையாய் நின்றாய்
என்றும் மறையாமல் என்னொடு இருந்தாய்
என்நிலை குலைந்து நான்விழும் தருணம்
எனைநின் கரங்களால் தாங்கி நின்றாய்.

இருதயம் இரண்டெனினும் துடிப்போ ஒன்று
பாதை இரண்டெனினும் பயணம் ஒன்று
உள்ளம் இரண்டெனினும் உணர்வோ ஒன்று
மெய்யோ இரண்டெனினும் உயிரோ ஒன்று

உனை நான் தேடினேன் ஞாலமெங்கும்
எனை நான் வருத்தினேன் என்றென்றும்
உனை நான் கண்டேன் என்னுள்ளே
எனை நான் தொலைத்தேன் உன்னுள்ளே

அன்பெனும் சிறையில் அடைத்து வைத்தாய்
பாசமெனும் கயிற்றால் கட்டி வைத்தாய்
சிறையிலிருந்து விடுதலை நான் வேண்டேன்
கயிறுதனை விலக்கிட நான் விழையேன்

நீயும் இருப்பாய் எனைபற் றிடவே
நானும் இருப்பேன் உனையணைத் திடவே
உனைநான் தாங்கிட எனைநீ தாங்கிட
தொடர்வோம் நாம்நம் பயணம் தனையே